திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டரை வயது சிறுவன் சுஜித் என்பவர் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சுஜித் மரணத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவாஜி(64), மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் உண்டாகும் மரணத்தை தவிர்த்திட இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றார். தமிழ்நாடு காவல் துறையில் 38 வருடங்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு லட்சம் பிரதிகளுடன் 50 நாட்கள் பயணத்தை கடக்க நவம்பர் 25ஆம் தேதி தனது சொந்த ஊரான கரூரிலிருந்து தொடங்கினார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற அவர் இன்று தேனி மாவட்டத்தில் தனது விழிப்புணர்வு பயணத்தை நிகழ்த்தினார்.
அவர் அளித்து வரும் பிரதியில்,
- பள்ளி விடுமுறை நாட்களில் தனியாக குழந்தைகளை எங்கும் அனுமதிக்கக் கூடாது.
- உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பது நல்லது.
- மூடப்படாத ஆழ்துளை கிணறு மற்றும் பேரிடர் பற்றிய தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொலைபேசியில் அழைக்கலாம்.
- புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் ஆகியவை உள்ளன.