தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பரமத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பாண்டி. இவர் அப்பகுதியில் அரசு மானியத்தில் கட்டிவரும் வீட்டிற்குப் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்காக சின்னமனூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மேலும் அரசுக்குச் செலுத்த வேண்டிய மின் இணைப்புத் தொகையான ரூ.2,800-யும் செலுத்தியுள்ளார்.
ஆனால், புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு அங்கு பணியாற்றக்கூடிய மின்வாரியத் துறை உதவிப் பொறியாளர் பூமிநாதன் 7,000 ரூபாய் தரவேண்டுமென சின்னப்பாண்டியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், மூன்றாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என பேரம் பேசியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலனிடம் சின்னப்பாண்டி புகாரளித்துள்ளார்.
அதனடிப்படையில், பூமிநாதனை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று சின்னபாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் 2700-ஐ, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதுமட்டுமின்றி சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளர் கீதா, 10 பேர் கொண்ட குழுவினர் அலுவலகம் அருகே மறைந்திருந்தனர்.
புதிய மின் இணைப்புக்கு கையூட்டு பெற்ற உதவிப் பொறியாளர் கைது இந்நிலையில், ரசாயம் தடவிய ரூபாய் நோட்டுகளை பூமிநாதனிடம் சின்னப்பாண்டி வழங்கியுள்ளார். அப்போது, விரைந்த லஞ்சம் ஒழிப்புத் துறை அலுவலர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மின் இணைப்பிற்காக கையூட்டு பெற்ற உதவிப் பொறியாளர் கைதான சம்பவம் சின்னமனூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.