தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக்குழு ஆய்வு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்புக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களுடன் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கண்காணிப்பு குழு ஆய்வு
கண்காணிப்பு குழு ஆய்வு

By

Published : May 9, 2022, 6:28 PM IST

Updated : May 9, 2022, 7:06 PM IST

தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை ஆகும். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் கடந்த 2014ஆம் ஆண்டு 142 அடியாக உயர்த்துவதற்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அணையைக் கண்காணித்து பராமரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் தலைமையில் 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினை உருவாக்கியது.‌ அதில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலப் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான, இக்குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டி.கே. ஜோஸ் ஆகிய மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.‌ இந்த கண்காணிப்புக்குழுவினர் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதியன்று அணையில் ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு-கேரளா மாநில பிரதிநிதிகளுடன் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு
இந்நிலையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக்குழுவில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசின் சார்பில் காவிரி தொழில் நுட்பக்குழுத் தலைவர் ஆர்.சுப்பிரணியம், கேரளா சார்பில் நீர்ப்பாசனத் துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகிய இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த ஐந்து பேர் கொண்ட கண்காணிப்புக்குழு இன்று (மே 9ஆம் தேதி) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக தேக்கடியில் உள்ள படகுத்துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்து தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கண்ணகி படகில் அணைக்கு பயணம் செய்தனர்.‌ கேரளப் பிரதிநிதிகள் அம்மாநிலத்திற்குச் சொந்தமான படகில் சென்றனர். இதில் பிரதான அணை, பேபி அணை, மதகுப்பகுதிகள், சுரங்கப்பகுதிகள் ஆகியனவற்றை குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் மதகுகளினை இயக்கி அதன் தன்மையை சரிபார்த்தும், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக்கசிவு நீரின் அளவினையும் சரிபார்த்தனர். அத்தோடு, தற்போது நிலவும் கோடை காலம் மற்றும் எதிர் வரும் தென் மேற்குப்பருவமழை காலங்களில் முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
முல்லைப்பெரியாறு அணையில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களும் கண்காணிப்புக்குழுவில் இடம் பெற்ற பிறகு நடைபெறும் முதல் ஆய்வு மற்றும் 15 மாதங்களுக்குப் பின் நடைபெறும் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு என்பதாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆய்வில் கண்காணிப்புக் குழுவினருடன் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொதுப்பணி, நீர்வளத்துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.
Last Updated : May 9, 2022, 7:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details