கம்பத்தில் காந்தி சிலையின் கையை உடைத்த மர்ம நபர்கள் தேனி:கம்பம் பகுதியில் அமைந்திருந்த காந்தி சிலையில் உள்ள கையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி எடுத்துச் சென்றுள்ள சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது. மேலும், சிலைக்கு முன் குவிந்து வரும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும், இது குறித்து காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகரப் பகுதியில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை ஒன்று அமைந்துள்ளது. கம்பம் நகரின் அடையாளமாக திகழக்கூடிய இந்த காந்தி சிலை, 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஐந்தரை அடி உயரம் கொண்ட வெண்கலத்தால் ஆன காந்தி சிலையை நிறுவ, கம்பம் நகரில் தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை காந்தி சிலைக் குழுவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் காந்தியின் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் நாட்டில் நடைபெறும் முக்கிய விழாக்களின்போது கம்பம் நகரில் உள்ள இந்த காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை.. வெளியான முழு பட்டியல் - 5 தனிப்படை அமைத்து விசாரணை தீவிரம்!
இந்நிலையில், நேற்றைய தினம் இந்த காந்தி சிலையில் புத்தகம் ஏந்தியவாறு அமைக்கப்பட்டிருக்கும் வலது கையை மர்ம நபர்கள் சிலர் உடைந்து சேதப்படுத்தி கையோடு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், கற்களைக் கொண்டு அந்த கையை சேதப்படுத்தியும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை சிலையின் கை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள், இது குறித்து கம்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கம்பம் நகர் முழுவதும் பரவியது. இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர், சிலை அமைப்பு குழுவினர், திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தற்போது காந்தி சிலைக்கு முன்பாக குவிந்து வருகின்றனர்.
அவர்கள் உடனடியாக காந்தி சிலையை சேதப்படுத்தி கையை எடுத்துச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில், கம்பம் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காந்தி சிலையின் கையினை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் கம்பம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை சாலைகளில் சுற்றித் திரிந்த 57 மாடுகள் பிடிக்கப்பட்டது.. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!