தேனி:மூணாறு பகுதிகளில் தொடர் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் வனத்துறையினர் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து தமிழ்நாட்டின் வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.
மேலும், கடந்த 27-ஆம் தேதி காலை கம்பம் நகர் பகுதிக்குள் திடீரென உலா வந்த அரிக்கொம்பன் யானை, அங்கிருந்த பொதுமக்களை விரட்டி அச்சுறுத்தியது. அதனைத் தொடர்ந்து யானையால் பொதுமக்களுக்கும், பொதுமக்களால் யானைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் நிலை வேலையின்றி கவலைக்கிடமானது. இதனால் அரிகொம்பனை பிடிக்கும் படியில் வனத்துறை தீவிரமாக செயல்பட்டு வந்தனர். மேலும், யானையின் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலர் கருவி மூலம் அரிக்கொம்பனை தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இதையும் படிங்க:அரிக்கொம்பனால் தோட்ட வேலைகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலா வந்த அரிசி கொம்பன் யானை, காமய கவுண்டன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையில் நின்று கொண்டிருந்தது. இந்த தகவல் அறிந்து யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 4) அரிசி கொம்பன் யானை சின்ன ஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மலைப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.