திருநெல்வேலி:தேனி மாவட்டம் கம்பம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் காட்டு யானை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. நெல்லை மேற்குதொடர்ச்சிமலையில் மணிமுத்தாறு அணை வழியாக கொண்டு செல்லப்பட்ட அரிக்கொம்பன் யானை, மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணைக்கு மேல் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் முத்துக்குழி வயல் என்ற இடத்தில் அரிக்கொம்பன் யானை பத்திரமாக விடப்பட்டது.
இந்த முத்துக்குழி வயல் அகத்திய மலை யானைகள் காப்பகமாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, பலரை தாக்கிய மிகவும் அச்சுறுத்தல் வாய்ந்த இந்த யானையை நெல்லை மாவட்டத்தில் விடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேவை இல்லாமல் வேறு ஒரு மாவட்டத்தில் இருக்கும் பிரச்னையை தங்கள் பகுதியில் இழுத்து விடுவதாக என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.
அதேநேரம், முரட்டுத்தனமான அரிக்கொம்பன் யானையை நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவதுதான் சிறந்த நடவடிக்கை என்பது வனத்துறையின் முடிவாக இருந்தது. ஏனென்றால், தற்போது யானை விடப்பட்டுள்ள முத்துக்குழி வயல் என்ற பகுதி மிகவும் பசுமை வாய்ந்த பகுதியாக உள்ளது.
அங்கு யானைக்கு தேவையான பொருட்கள் அதிக அளவில் உள்ளன. அதேபோல் தண்ணீருக்கும் அங்கு பஞ்சம் இல்லை. எனவே, அரிக்கொம்பன் யானை தனது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அங்கேயே இருந்து விடும் என்பது வனத்துறையின் கணிப்பு.
அதேநேரம், யானை விடப்பட்டுள்ள கோதையாறு வனப்பகுதிக்கு மிக அருகில்தான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதி அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அதேப் போன்று காரையாறு அணை அருகே காணி பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.