தேனி:தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து விளம்பரத்தில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு, மதுரை மாவட்டம் கொடிக்குளத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவரிடம் பேசினார்.
இதையடுத்து அன்புச்செல்வனிடம் இருந்து ஒரு காரை 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்க பேசி முடித்துள்ளார். காரை வாங்குவதற்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானிக்கு வரும்படி கூறியதையடுத்து, மதன்ராஜ் அங்கு சென்றார். அங்கு அன்புச்செல்வனை தொடர்பு கொண்டபோது, தான் மருத்துவ பரிசோதனைக்காக வெளியூர் வந்துவிட்டதாகவும், அங்குள்ள தனது நண்பர்கள் ஆனந்த் மற்றும் முருகன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்களிடம் பணத்தை கொடுத்த மதன்ராஜ் காரை எடுத்துச் சென்றார். சில நாள்கள் கழித்து கார் புரோக்கரான மதன்ராஜ் அதே காரை 9 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மறுவிற்பனை செய்தார். இதையடுத்து சிலநாள்களில் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டுபிடித்து கேரளா மாநிலத்தில் இருந்து வந்த போலீசார், இந்த கார் திருடப்பட்ட கார் என்று கூறி அதை விக்னேஷிடம் இருந்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், தான் கார் வாங்கிய மதன்ராஜை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி, தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மதன்ராஜ், தான் கார் வாங்கிய அன்புச்செல்வனை தொடர்பு கொள்ளா முடியாமல் இருந்துள்ளார்.