தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Andipatti nurse murder case: தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி - ஆண்டிபட்டி செவிலியர் கொலை வழக்கு

Andipatti nurse murder case: செவிலியர் கொலை வழக்கில், விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட மருத்துவப் பணியாளர் தான் கொலையாளி என்பதைக் காவல் துறையினர் உறுதி செய்தனர்.

ஆண்டிபட்டி செவிலியர் கொலை வழக்கு
ஆண்டிபட்டி செவிலியர் கொலை வழக்கு

By

Published : Dec 21, 2021, 3:44 PM IST

Updated : Dec 21, 2021, 4:33 PM IST

தேனி(Andipatti nurse murder case): ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தவர் செல்வி (45). இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

செவிலியர் செல்வியுடன் தொடர்பில் இருந்த நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், கொலைச் சம்பவம் குறித்து எந்தத் துப்பும் கிடைக்காததால் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறினர்.

இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்து வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும்படி காவல் துறைக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டார்.

செவிலியர் கொலை வழக்கு

செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை இந்த மாதம் 10ஆம் தேதி காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரபிரபு (34) என்பவரையும் அழைத்தனர்.

இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என அனுப்பி வைத்தனர். ஆனால், அடுத்த நாள் காலை அதாவது 11ஆம் தேதி மருத்துவப் பணியாளர் ராமச்சந்திரபிரபு, ஊத்துக்காடு பகுதியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராமச்சந்திரபிரபு மீது காவல் துறையினருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரபிரபு குறித்த விசாரணையைக் காவல் துறையினர் தீவிரப்படுத்தினர்.

பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் ஆண்டிபட்டி செல்வியைக் கொலை செய்தது மருத்துவப் பணியாளர் ராமச்சந்திரபிரபு தான் என்பதை, தற்போது காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவலர் ஒருவரிடம் கேட்டபோது, "செவிலியர் கொலை வழக்கு குறித்து மருத்துவப் பணியாளர் ராமச்சந்திரபிரபுவிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவந்தார். செவிலியர் செல்வியிடம் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளார்.

இதன்காரணமாக கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வரும்படி அழைத்து இருந்தோம். ஆனால், அவர் விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வியும், மருத்துவப் பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பணியாளரே குற்றவாளி

அதன்பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றிய போதும், அவர்களுக்கிடையேயான உறவு நீடித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் செல்விக்கு லட்சக் கணக்கில் பணம் கடன் வாங்கி கொடுத்ததாகத் தெரிகிறது. பல்வேறு இடங்களில் கடன் வாங்கிக் கொடுத்ததால், ராமச்சந்திரபிரபுவிற்கு கடன் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் செவிலியர் செல்வியிடம் கொடுத்த பணத்தைத் தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால், செவிலியர் செல்வி பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிபட்டி வந்த ராமச்சந்திரபிரபு, செவிலியர் செல்வியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு ஆக மாறியுள்ளது. அந்தச் சண்டையில் ராமச்சந்திரபிரபு தாக்கியதில் செவிலியர் செல்வி இறந்துள்ளார். அதன்பின்னர் சுமார் மாலை 3.40 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி அவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தாலிச் செயினையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். ராமச்சந்திரபிரபு வந்து சென்றது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையும் ராமச்சந்திரபிரபுவின் கைரேகையும் ஒத்துப் போகிறது. மேலும் ராமச்சந்திரபிரபு தான் செவிலியர் செல்வியிடம் கடைசியாகப் போனில் பேசியுள்ளார்.

செவிலியர் செல்வி கொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், அவரது 3 சவரன் தாலிச் செயினை தேனி, பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ராமச்சந்திரபிரபு அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:கார் ஓட்டும்போது மாரடைப்பு - உயிரிழந்த ஓட்டுநர்

Last Updated : Dec 21, 2021, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details