தேனி:போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போதை பொருள் நூண்ணறிவு பிரிவு காவல்துறையினர் ஒரு நபரை அனுப்பி கஞ்சாவை வாங்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு மறைந்து இருந்த போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக யோவான் என்பவரையும் அவரது தம்பி வீரமுத்து குமார் என்பவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அங்கு கூடிய இவர்களின் உறவினர்கள் காவலர்கள் அழைத்து செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவலர்கள் வேறு வழியின்றி திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் யோவான் மற்றும் வீரமுத்துகுமார் இருவரும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தேனி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை ஆய்வாளர் சத்யா, காவலர்கள் ராஜா மற்றும் ஸ்டாலின் ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்ததாக கூறப்படுகிறது.
இருவரையும் கையில் விலங்கு மாட்டி ஆட்டோவில் தேனி மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கைது செய்யபட்டவர்களின் உறவினர்கள் பரபரப்பாக இயங்கும் முக்கிய வழித்தடமான தேனி புறவழிச்சலை பகுதியில் கூடி ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.