தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட சண்முகசுந்தரபுரம் மூன்றாவது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த லோகிராஜன், திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன், அமமுகவைச் சேர்ந்த அய்யணன் உள்ளிட்டோரும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரது சகோதரரான திமுக வேட்பாளர் மகாராஜனிடம் தோல்வியடைந்தவர்.
இந்நிலையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் அப்பகுதியில், அதிமுக - அமமுகவிற்கு நேரடிப் போட்டி நிலவியது. இதில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் வெற்றிபெற்றால் ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் ஆவதற்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே அமமுக வேட்பாளர் அய்யணன் என்பவரை, அதிமுக வேட்பாளர் லோகிராஜன், ’என்னை எதிர்த்தா தேர்தலில் நிற்கிறாய், உன்னை தேர்தல் முடிந்தவுடன் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சண்முகசுந்தரபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சண்முகசுந்தரபுரத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம், அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தனது குடும்பத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி அமமுக வேட்பாளர் அய்யணன் புகார் மனு அளித்தார்.
இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் சண்முகசுந்தரபுரத்தில் காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.