நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு பிறகு, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் , அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது என கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமமுகவில் இருந்து விலகி தங்க தமிழ்செல்வன், அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக டிடிவி தினகரனை விமர்சித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில், 'நான் விஸ்வரூபம் எடுத்தால், நீங்க அழிந்துபோவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனில கூட்டம் போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு. என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாமுனு உங்க அண்ணன் தினகரனிடம் சொல்லிடு. தோத்துப்போவ, என்னைக்கும் ஜெயிக்க மாட்ட" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.