தேனி,மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்(மே15)அன்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் உட்பட புதுடெல்லி, தெலுங்கானா, வாரணாசி, லோனோவாலா, கோரக்பூர் (உபி) கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் 21 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
முதலாவதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த கூடைப்பந்தாட்ட கழக அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. ஞாயிற்று கிழமை நடைபெற்ற போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெரியகுளம், நெல்லை, செங்கோட்டை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றன. இந்திய அளவில் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில், வெற்றி பெரும் அணிகள், லீக் சுற்று போட்டிகளில் பங்கேற்க உள்ளன.