தேனி:தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் இன்று (டிசம்பர் 15) தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பெண்மணியாக கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வந்தவர் ஜெயலலிதா.
அவரது மறைவிற்கு பிறகு தொண்டர்களாலும் தற்போது சிறப்பாக நடத்தப்படுகிறது. தொண்டர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு தான் ஆண், பெண் இருவரும் சரிசமமாக 5 ஆண்டு கால ஆட்சி புரிய வேண்டும் என துணை முதலமைச்சர் கூறினார். அது குறித்து கமல்ஹாசன் பேசியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
மேலும், பெண்களுக்கு சமமான இடம் கொடுப்பதில் தமிழ்நாட்டில் சிறந்த இயக்கமாக அதிமுக உள்ளது. தேனி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கூட ஒரு பெண்மணிதான்" என்றார். சூசகமாக ஓபிஎஸையும், ஓ.பி. ரவீந்திரநாத்தையும் கமல்ஹாசன் குறிப்பிட்ட பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எனது தந்தை கடந்த 1996ஆம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற தலைவராக வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட்டதால் தான் 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 4முறை வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் வரை பதவி உயர்வு பெற்றார்.
'மக்கள் சேவை புரிபவர்களுடன் அதிமுக கூட்டணி வைக்கும்' - ஓ.பி. ரவீந்திரநாத் தேனி மாவட்டம் இன்றைக்கு தன்னிறைவு பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. தேனியில் மருத்துவம், பொறியியல், சட்டக் கல்லூரிகளை தொடர்ந்து தற்போது கால்நடை கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால்தான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது துணை முதலமைச்சராக இருக்கிறார்.
அதுபோல நானும் கடந்த 20ஆண்டுகளாக மக்கள் சேவை புரிந்து வந்ததால்தான் தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கிறேன். கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். மக்கள் அவரை அங்கீகரிக்கட்டும். அதன்பிறகு அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன்" என்றார்
ரஜினியின் அரசியல் வருகை, கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தென்னக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அவரும் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்கள் ஏற்றுக்கொண்டால் மக்கள் சேவை புரியலாம். சிறப்பாக மக்கள் சேவை புரிபவர்கள்கூட அதிமுக கூட்டணியில் பங்கு பெறுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க:வேளாண் பணிகளுக்காக திறந்துவிடப்பட்ட சண்முகா அணை நீர்