மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லியை அடுத்த புராரி பகுதியில் கடந்த பத்து நாள்களாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளை எதிர்கட்சியான திமுக வன்மையாகக் கண்டித்துள்ளது. அத்துடன், தமிழ்நாடு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் இன்று (டிச.5) திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் தேனி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சந்திப்பு, மதுரை சாலை ஆகிய பகுதிகளைக் கடந்து பங்களாமேடு பகுதியை பேரணி அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன், “ புதிய வேளாண் சட்ட மசோதக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றிய போது அதனை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் எதிர்த்தார். சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததோடு மட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.