தேனியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் போக்குவரத்து தேனி:1928 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை ரயில் போக்குவரத்து முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. பின்னர், ரயில் போக்குவரத்து மீட்டர் கேஜ் பாதையிலிருந்து மாற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், சுமார் ரூபாய் 360 கோடி செலவில் மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு, இந்தாண்டு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தேனி வழியாக போடிநாயக்கனூர் வரை பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில், 2001ஆம் ஆண்டு வரை தேனி மாவட்டத்தில் போடி, கம்பம் மற்றும் குமுளி பகுதிகளிலிருந்து ஏலக்காய், மிளகு, தேங்காய், வாழை, மாங்காய், திராட்சை, நெல், மற்றும் பல்வேறு உற்பத்தி பொருட்கள் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வந்தது.
முன்னதாக 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சேவையின் போது, தேனிக்குத் தனி சரக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு பயணிகள் ரயிலுடன் சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு உற்பத்தி பொருட்கள் வெளியூர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் உற்பத்தி பொருட்களைச் சென்னை மற்றும் மதுரையிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் தேனிக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு சுமார் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தேனி ரயில்வே நிலையம் அருகில் தனி இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சரக்குகள் ஏற்றுவதற்கு வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏற்றவாறு சிமெண்ட் தளம் மற்றும் நடைமேடை சாலைகள் அமைக்கப்பட்டு முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட புக்கிங் அறை மற்றும் பயணியர் ஓய்வு அறைகள் போன்ற பல்வேறு அறைகள் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் பேட்டபள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 300 டன் அரிசி தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை விநியோகத்திற்காகச் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு நேற்று (அக்.21) இரவு தேனி ரயில் நிலையம் வந்தடைந்தது. தற்போது, தேனிக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் தேனி மாவட்ட வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:“நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் வெற்றி முன்னோட்டமாக இருக்கும்” - ஜோதிமணி எம்பி