வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் கிடப்பதால் அடுக்கம், சாமக்காடு, பாலமலை, பெருமாள் மலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பாறைகளை அகற்றி போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணியில் தொய்வு இருந்து வந்தது.
தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ராட்சதப் பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இரண்டு ஜெசிபி இயந்திரம், கிட்டாச்சி இயந்திரம் மூலம் மண் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சாலையில் உருண்டுவிழுந்த பாறைகள் அகற்றும் பணி மேலும், ஐந்து இடங்களில் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்ற முடியாத பாறைகளை, கம்ப்ரசர் இயந்திரம் மூலம் துளையிட்டு வெடி வைத்துத் தகர்த்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சாலையில் இருசக்கர வாகனம் செல்லும் அளவிற்குச் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:தலையாறு அருவியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள்!