ஓபிஎஸ்-க்கு 72வது பிறந்தநாள் - 72 கிலோ எடையிலான கேக் வெட்டிய தொண்டர்கள் பெரியகுளம்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டின் முன் திரண்ட தொண்டர்கள், ஓபிஎஸ்-க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
அப்போது, பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தெரு உள்ளிட்டப் பகுதிகளில் வருங்கால முதலமைச்சர், அதிமுகவின் மூன்றாம் தலைமையே என போஸ்டர்கள் ஒட்டியும், கோஷங்கள் எழுப்பியும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஓ.பி.எஸ்.க்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற, அவரது பெரியகுளம் இல்லம் முன் திரண்டனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சில தொண்டர்கள் செங்கோல், விநாயகர் சிலை, வெள்ளி வேல் உள்ளிட்டப் பரிசு பொருட்களை வழங்கி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.
இதில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி 5.5 கிலோ எடையிலான வெள்ளி வேல் வழங்கினார். தொடர்ந்து 72 கிலோ எடையிலான ராட்சத கேக் வெட்டி தொண்டர்களுடன் ஓ.பன்னீர்செல்வம், பிறந்த நாளை கொண்டாடினார். ஓ.பி.எஸ் வீடு முன் திரண்ட ஆதரவாளர்கள் தாரை தப்பட்டை அடித்து மேள தாளங்களுடன் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:"எனது கடவுளைப் பார்த்துவிட்டேன்" - எக்ஸைட்டான ராஜமெளலி!