தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மயில்வேல், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோருக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அவர் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது என புகழாரம் சூட்டினார்.
அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியைச் சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் செய்கின்றனர். ஆனால் காங்கிரஸ், திமுக ஆட்சியில்தான் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விரு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டு நிறைந்துள்ள கட்சிகள் எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் இளைஞர், பண்பாளர், படித்தவர். மக்களின் பிரச்னைகளை மக்களவையில் பேசக்கூடிய நபராகவும், பொதுமக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவராகவும் இருப்பார்.
எனவே அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.