தேனியில் ஆவின் பால் கெட்டு போன விவகாரம்..பொதுமக்கள் குற்றச்சாட்டு தேனி:கெட்டுப்போன ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் ஆவின் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில், தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் மூன்று ஆவின் பால் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆவின் பால் கடைகளில் கெட்டுப் போன பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதாக கூறி பால் பாக்கெட்டுகளை ஆவின் பாலகங்களில் திருப்பி கொடுத்து, கடை ஊழியர்களிடம் பணத்தை திரும்ப தருமாறு பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், இப்பிரச்சினை குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கடந்த மூன்று நாட்களாக கெட்டுப்போன ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்கின்றனர். ஆவின் கோல்ட் என்ற பால் பாக்கெட் முழுமையாக கெட்டுப் போவதால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கெட்டுப்போன ஆவின் பால் பாக்கெட்டை கடை உரிமையாளர்களிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால், ஆவின் பாலை திரும்பிக் கொடுத்ததற்கு பணத்தை திருப்பித் தராமல் உள்ளது பெரும் வேதனை அளிக்கிறது. மேலும், அரசு சார்பில் இயங்கும் ஆவின் பால் தரமான முறையில் மக்களுக்கு கிடைக்கும் என நம்பிக்கையில் வாங்கி வந்த நிலையில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்களாக வழங்கப்படும் பால் பாக்கெட்டுக்கள் கெட்ட நிலையில் உள்ளது" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!