தேனி: திருச்சி மாநகரைச் சார்ந்தவர் வின்சி (26). திருநங்கையான இவர் திருச்சியில் தனது வீட்டை விட்டு வெளியேறி தேனி மாவட்டத்திற்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தேனி பகுதியில் தனது உறவினர் இல்லங்களில் இருந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கம்பத்திற்கு வந்துள்ளார். அங்கு உள்ள பால் பண்ணை ஒன்றில் வின்சி பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த பால்பண்ணைக்கு வந்து சென்ற கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சார்ந்த ஐயப்பன் என்பவரது மகன் அறிவு (26) என்பவர் வின்சியிடம் நட்பாக பழக்கியுள்ளார்
பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்து வின்சியை, அறிவு திருமணம் செய்து கொண்டு காமைய கவுண்டன்பட்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இளைஞர் அறிவின் தொழிலுக்காக வின்சி பல்வேறு பகுதிகளில் இருந்து கடன் பெற்று அறிவுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அறிவுக்கும், வின்சியிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, தற்போது இளைஞர் அறிவு வின்சியை சந்திப்பதை தவிர்த்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த வின்சி இரண்டு தினங்களுக்கு முன்பாக கம்பம் காவல் நிலையத்தில் அறிவுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த சூழலில் இன்று கம்பம் கூடலூர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இருந்த செல்போன் கோபுரம் (Cell phone tower) ஒன்றின் மீது திடீரென வின்சி பெட்ரோல் கேனுடன் மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.