தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒருபுறம் நரசிம்மர்! மறுபுறம் ஆஞ்சநேயர்!' - சிலைக்குள் ஒளிந்துள்ள கலை - Theni Venkateswara Sculpture Gallery

தேனி : பங்களாமேடு பகுதியில் உள்ள சிற்பக் கலைக் கூட சிற்பிகள் சுமார் 12 டன் எடையுள்ள ஒரே கல்லில் எட்டு அடி உயரத்தில் ஒருபறம் ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் மறுபுறம் பஞ்சமுக பஞ்சமுக ஆஞ்சநேயரையும் சிலையாக வடித்துள்ளனர்.

சிலையை உருவாக்கிய மகிழ்ச்சியில் சிற்பிகள்
சிலையை உருவாக்கிய மகிழ்ச்சியில் சிற்பிகள்

By

Published : Feb 28, 2020, 9:24 PM IST

தேனி பங்களாமேடு பகுதியில் ஒரு சிற்பக் கலைக் கூடம் உள்ளது. இங்கு 8 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஒருபுறம் ஸ்ரீலட்சுமி நரசிம்மரும் மறுபுறம் பஞ்சமுக ஆஞ்சநேயரும் உள்ள சிலையை சிற்பிகள் வடிவமைத்துள்ளனர். கர்ஜிக்கும் சிங்க முகம் கொண்ட நரசிம்மர் மடியில் லட்சுமி அமர்ந்திருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஐந்து தலைகள் கொண்ட பாம்பு பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. மறுபுறத்தில் வாராகி, கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், கல்கி ஆகிய ஐந்து முகங்களுடன் கூடிய இந்த சிலை பத்து கைகளுடனும் ஆயுதங்கள் ஏந்தி அபய ஹஸ்தத்துடன் காட்சியளிக்கின்றது.

இது குறித்து சிற்பக்கூடத்தின் மூத்த சிற்பி செல்வம் கூறுகையில், "திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் சுமார் 30டன் எடையிலான "ஆண் கல்" தேர்வு செய்தோம். கடந்த 7 மாதங்களாக எங்களது சிற்பக் கலைஞர்கள் சுமார் 20 பேர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது சுமார் 12டன் எடையில், 8அடி உயரத்தில் ஒரே கல்லில் ஶ்ரீலட்சுமி நரசிம்மர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயரை தத்ரூபமாக வடிவமைத்துள்ளோம்" என்றார்.

ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் சிலை - சிறப்பு தொகுப்பு

மேலும் பேசிய அவர், "பெரும்பாலான பெருமாள் கோயில்களில் ஒரே கல்லில் நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் முகங்கள் தான் இடம்பெற்றிருக்கும். மேலும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைகளிலும், திசைக்கொரு முகமும், ஐந்தாவது முகம் மேற்பகுதியிலோ அல்லது ஈசான்ய திசையை நோக்கித் தான் வடிவமைத்திருப்பர். ஆனால் எங்களது சிற்பக் கூடத்தில், ஒரே நேர்கோட்டில் நின்றவாக்கில் ஆஞ்சநேயரின் பஞ்ச முகங்களும், மறு திசையில் உட்கார்ந்த நிலையில் ஶ்ரீலட்சுமி நரசிம்மரையும் வடிவமைத்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும்" என்றும் தெரிவித்தார்.

சிலையை உருவாக்கிய மகிழ்ச்சியில் சிற்பிகள்

தமிழ்நாட்டில் முதன் முறையாக பஞ்சமுக ஆஞ்சநேயரையும், லட்சுமி நரசிம்மரையும் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். பல நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை நேர்த்தியாகவும் பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் விதத்திலும் உள்ளது. இந்த சிலை தேனி மாவட்டம் உப்பார்பட்டி பெருமாள் கோயிலில் ஜூன் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க :

'எங்களின் வாழ்வாதரம் காக்க தொழிலை வரைமுறைப்படுத்துங்கள்' - செங்கல் சூளை தொழிலாளிகள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details