தேனி: புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம், நீட் தேர்வு ரத்து செய்வோம் என கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பி உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பங்கேற்று, 'மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான கிருஷ்ணசாமி பங்கேற்றார். இதில் மருத்துவர் கிருஷ்ணசாமி மதுவினால் ஆண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் நோய்கள் குறித்த புத்தகத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கட்சியினர் உட்பட அனைவரும் 'மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்' என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் மதுவால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரழிந்து வருவது குறித்தும், தமிழகம் மதுவால் பின்னோக்கி செல்வதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், தற்பொழுது ஆட்சியில் உள்ள திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது அவர்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று கூறி வாக்குகளைப் பெற்று தற்பொழுது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏன் இன்னும் மதுவிலக்கு கொண்டு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.