கம்பத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழப்பு தேனி: தேனி மாவட்டம், கம்பம் கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கவிநாத்(34). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கம்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் எழுத்தராக பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு (ஜன.2) கவிநாத் கம்பத்திலிருந்து தேனி நோக்கி செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவருக்கு பின்னால் குமுளியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கம்பம், புதுப்பட்டிக்கு இடையே தனியார் பெட்ரோல் பங்க் அருகே கவிநாத் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக கவிநாத் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குளானது.
இதில், கவிநாத் நிலை குலைந்து பேருந்தின் சக்கரக்களுக்கு நடுவே சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனால், கவிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கவிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் கம்பம் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் வாலிபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:’எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இளையராஜா இசையமைத்தார்’- இயக்குநர் கண்ணுச்சாமி நெகிழ்ச்சி