தேனி:பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு, தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று மாலை, தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் இருவரும் கஞ்சா மற்றும் மது போதையில் பிரபாகரன் வீட்டிற்கு அரிவாள் மற்றும் கத்தியுடன் சென்றுள்ளனர். அப்போது, பிரபாகரன் வீட்டில் இல்லாத காரணத்தால், அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது கத்தியால் ஹேமலதாவின் உடையைக் கிழித்து, வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஹேமலதா பயத்தில், அவசர எண் 100-க்கு அழைத்து, தங்களது வீட்டில் இருவர் கத்தி மற்றும் அரிவாளுடன் தகராறு செய்வதாக புகார் தெரிவித்ததோடு, உடனடியாக தனது தாயை அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்காகச் சென்றுள்ளனர்.
அப்பொழுது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும், போலீசாரிடமும் தகாத வார்த்தைகளைக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் காமராஜ் என்ற இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து, விசாரணைக்கு வந்த போலீசாரைப் பார்த்து "வெட்டினால் தலை துண்டாக போய்விடும்" என மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.