தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எஸ்கேஏ நகரில் வசித்துவருபவர்கள் தினேஷ் - உஷாராணி தம்பதியினர். தினேஷ் மதுரை கல்லூரியில் பேராசியராகவும், அவரது மனைவி உஷாராணி ஆண்டிபட்டியில் சார் - பதிவாளராகவும் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ஆண்டிபட்டி அருகிலுள்ள மணியாரம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன் (54) என்பவர் உஷாராணியிடம், இரட்டை அர்த்த வசனத்தில் பேசி, தனக்கு சாதகமான பத்திர பதிவு அலுவல்களை செய்துதரக்கூறி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக பத்திரம் பதிவு செய்து தர இயலாது என உஷாராணி மறுக்கவே நேற்று (செப். 30) மாலை அலுவலகத்தில் பணியிலிருந்தபோது கணேசன் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக கேட்ட தினேஷிற்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ற தினேஷ், அவரது அக்கா மகன்கள் கவியரசன் (20), சதீஷ்குமார் (21) ஆகியோரை பின்தொடர்ந்து காரில் வந்த கணேசன், அவர்கள் மீது மோதி காயம் ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஆண்டிபட்டி காவல் துறையினர், பெண்களை துன்புறுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வழக்கறிஞர் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.