தேனி மாவட்டம் ஆண்டிபட்டி குன்னூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ்(45). தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீரமணா ஜவுளிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த ஜனவரி 25ஆம் தேதி, வழக்கம் போல கடையின் விற்பனை பணத்தை வங்கியில் போடுவதற்கு தேனி பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வெளியே இருந்த ஏ.டி.எம் பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்தச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த இளம்பெண் ஒருவர், நாகராஜிடம் தான் பணம் செலுத்துவதற்கு தான் உதவி செய்வதாக கூறி ரசீது வராத இயந்திரத்தில் ரூ. 50 ஆயிரம் பணத்தை போட்டுள்ளார். அதில், ஒரு ஐநூறு ரூபாய் தாளை மட்டும் இயந்திரம் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், மீதம் ரூ.49,500 கணக்கில் செலுத்தப்பட்டதாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.500ஐ பெற்றுக் கொண்ட நாகராஜ்,ஜவுளிக்கடை நிறுவனத்தின் வங்கி கணக்கை சரி பார்க்கையில் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் செலுத்தப்பட்ட பணம் வரவு ஆகாமல் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கியைத் தொடர்புகொண்டு விசாரிக்கையில், சம்பவத்தன்று ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலாக பணம் ஏதும் பெறப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேலாளர் நாகராஜ், தேனி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது.
இதில் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், உதவி செய்வதாகக் கூறிய இளம்பெண், நாகராஜ் கொடுத்த பணத்தை இயந்திரத்தில் செலுத்துவது போல நடித்து, அவர் சென்றதும் பணத்தை திரும்ப எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.