தேனி: தேவாரம் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் மற்றும் மணிமாலா தம்பதியினர் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருவரும் விவகாரத்து பெற்றுவிட்டனர்.
இந்த விவாகரத்து வழக்கில் மணிமாலா தனது கணவர் ரமேஷிடம் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த வழக்கு தொடர்பாக போடி நீதிமன்றத்தில் ஆஜரான மணிமாலா, மதியம் இரண்டு மணி அளவில் நீதிமன்றத்திலிருந்து போடி பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது நீதிமன்ற வளாகம் அருகே நின்று கொண்டிருந்த டவேரா கார் ஒன்று அதிவேகமாக வந்து, நடந்துச் கொண்டிருந்த மணிமாலாவின் மீது பலமாக மோதியது. இதில் முன் பகுதி சக்கரத்தின் இடையே சிக்கிக்கொண்ட மணிமாலா பலத்த காயமடைந்தார்.
அப்போது நீதிமன்ற வளாகம் முன்பு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கண்டு உடனடியாக டவேரா கார் ஓட்டி வந்த ஓட்டுநர் பாண்டித்துரையை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். பலத்த காயம் அடைந்த மணிமாலாவை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.