தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் தென்கிழக்குப் பகுதியில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 300 ஆண்டுகால பழமையான மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து, இக்கோயில் ஆகம விதிப்படி பிரமாண்ட ராஜ கோபுரத்துடன் அமைக்கப்பட்டதால் கேரள மாநிலத்திலிருந்து தினமும் பக்தர்கள் கூட்டம் வந்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில் கோயிலின் ராஜகோபுரம் முன்பு அமைந்திருக்கும் 200 ஆண்டு கால பழமையான அரச மரத்தை குழந்தை வரம் வேண்டுவோர் 48 நாள்கள் விரதமிருந்து 108 சுற்றுகள் சுற்றிவந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஜதீகம்.
இந்நிலையில் இன்று திடீரென 90 அடி உயரம் கொண்ட அந்த அரசமரம் வேருடன் சாய்ந்து கோயில் வளாகம் மற்றும் அருகிலிருந்த இரண்டு வீடுகளின் மீது விழுந்தது. ஆனால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் கடைவீதி வழியாகச் செல்லும் ஏத்தக்கோயில் இணைப்புச்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதையடுத்து மரத்தை அப்புறப்படுத்த ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
வேருடன் சாய்ந்த 200 ஆண்டுகால அரச மரம் பழமையான கோயில் அரசமரம் மழை, காற்று இல்லாத நேரத்தில் திடீரென வேருடன் சாய்ந்ததும், அவ்வாறு சாய்ந்தும் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படாததும் அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டினுள் புகுந்த 3 கொடிய விஷமுள்ள பாம்புகள்