தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! - tn news

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

800 kg smuggling ration rice seized
கேரளாவிற்கு கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Jul 21, 2023, 12:24 PM IST

தேனி: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதனை மீறியும் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் கம்பம் மெட்டு சோதனை சாவடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து கம்பம் மெட்டு சோதனை சாவடியில் உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கள் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரின் உதவியோடு வருவாய்த் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகப்படும் படியாக அந்த வழியே வந்த ஜீப் ஓன்றை வழி மறித்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் இருந்து சுமார் 800 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி, தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 800 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை உணவுப் பொருள் கிடங்கில் ஒப்படைத்து விட்டு, கடத்தலுக்காக பயன்படுத்தபட்ட ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து ஆந்திராவிற்கு ஜீப் மூலம் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், நடப்பாண்டில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை கடத்திய குற்றத்திற்காக சுமார் 764 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் 525 நபர்களை குடிமைப் பொருள் குற்றப் புலானாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது போன்ற குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏதேனும் தெரிந்தால் புகார் அளிக்க 1800 500 5950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details