நம் நாட்டில் வீடுகள், சாலையோரம், நிரந்தரமற்ற இடங்களில் நடைபெறும் முறைப்படுத்தப்படாத தொழில்கள், நிலையான அமைவிடங்களிலுள்ள நிறுவனங்களில் நடைபெற்றுவரும் முறைப்படுத்தப்பட்ட தொழில்கள் ஆகியவைகளும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது குறித்த பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு, அதனை பொது சேவை மையம் மூலம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் தேசிய அளவிலான 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு தொடக்கம்!
தேனி: தேசிய அளவிலான ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கிவைத்தார்.
1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை ஆறாவது முறை பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. ஏழாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணியினை தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி ஆளுநரால் தொடங்கிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குள்பட்ட பகதிகளுக்கான பணியினை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று தொடங்கிவைத்தார்.
2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பின்போது சுமார் 75 ஆயிரத்து 97 நிறுவனங்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பொது சேவை மையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட கணக்கெடுப்பாளார்கள், தேனி மாவட்டத்திலுள்ள, 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 8 ஒன்றியங்களுக்குள்பட்ட 130 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கும் நேரில் சென்று அங்கு நடைபெறும் தொழில்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தனர்.