தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி (29). பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியில் தான் பதிவேற்றம் செய்திருந்த காணொலிகளைத் தரவிறக்கம்செய்து குரல் மாற்றி அதனைச் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுகந்தி புகார் அளித்தார்.
டிக்டாக் காணொலிகளில் மோசடிசெய்தவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு அதனடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவர் தேனி ஸ்ரீரெங்கபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், நாகாலாபுரம் ரமேஷ், அரப்படித்தேவன்பட்டி அழகர்ராஜா, மதுரை செல்வா ஆகியோரது ஆலோசனைப்படி சுகந்தியின் காணொலிகளைத் தரவிறக்கம் செய்து அதில் குரலை மாற்றி பேசியுள்ளார்.
மேலும் சுகந்தியின் தந்தை ராஜூ, சகோதரி நாகஜோதியின் மகள்கள் வைஷ்ணவி, சாதனா ஆகியோரது புகைப்படங்களை இணைத்து ஆபாசமாக காணொலி பதிவிட்டு அதனை திவ்யா கள்ளச்சி என்ற முகவரியில் சமூக வலைதளங்களில் வெளியிட்டது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் இது தொடர்பாக நேற்று (டிச. 08) திவ்யா உள்பட ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் திவ்யா கைதுசெய்யப்பட்டு காவல் நிலைய சொந்த பிணையில் வெளியே விடப்பட்டார். இந்நிலையில் பிணையில் வந்த திவ்யா தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் தனது செல்போனை தரவில்லை எனக்கூறி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று, செல்போன் வழக்கு விசாரணைக்கான நீதிமன்றத்தில் உள்படுத்தப்பட உள்ளதால் தர இயலாது எனத் தெரிவித்ததையடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.
இதையும் படிங்க:இறுதிகட்ட சோதனையை எட்டியது அர்ஜுன் மார்க் 1: விரைவில் ராணுவத்திற்கு கூடுதல் பலம்!