தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரே வராத கண்மாயைத் தூர்வாரியதாக ரூ.4.50 லட்சம் கணக்கு... மாயமான திட்டப்பலகை - கண்மாய்

தேனி மாவட்டத்தில் கண்மாய் தூர்வாராமல் தூர்வாரியதாக ரூ.4.50 லட்சம் செலவு செய்ததாக வைக்கப்பட்ட திட்டப்பலகை, அலுவலர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதும் திட்டப்பலகை மாயமானது.

நீரே வராத கண்மாயை தூர்வாரியதாக 4.50 லட்சம் மோசடி...மாயமான திட்ட பலகை
நீரே வராத கண்மாயை தூர்வாரியதாக 4.50 லட்சம் மோசடி...மாயமான திட்ட பலகை

By

Published : Aug 25, 2022, 4:07 PM IST

தேனி: ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் கூலப்ப ராம கவுண்டர் என்ற கண்மாய் அமைந்துள்ளது. 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கண்மாய்க்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீர் தான் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த கண்மாயில் நிரப்பப்படும் நீரானது, அந்தப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு 100 நாள் திட்டத்தின் மூலமாக ரூ.4.50 லட்சம் கண்மாயினை தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. கண்மாய்க்கு நீர் வரும் வாய்கால்களை எதுவும் தூர்வாராமலும், 500 மரக்கன்றுகள் நடப்பட்டதாக பெயரளவிற்கு கணக்குக் காட்டப்பட்டு, பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் தூர்வாரப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 2022-23 நிதியாண்டிற்கான ”அம்ரீத் சரோவர்” என்ற 15ஆவது மத்திய நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் இதே கண்மாயினை தூர்வாரப்பட்டதாக பெயர்ப்பலகை மற்றும் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டன. வழக்கம் போல கண்மாய்க்கு நீர் வரும் வாய்க்கால்களை முற்றிலுமாக தூர்வாராமல், நீர் வரும் வழித்தடங்கள் முற்றிலுமாக தூர்ந்து போன நிலையில், கண்மாயில் மட்டும் பெயரளவிற்கு மண்ணை அகற்றி விட்டு தூர்வாரியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதுவும் கண்மாயின் கரையினைப் பலப்படுத்தாமல் பெயரளவிற்கு கரைகளில் மண்ணைக்கொட்டி விட்டும், கண்மாயில் மேடு பள்ளங்களைக்கூட சரி செய்யாமலும், கண்மாயில் இருந்து நீர் வெளியேறும் மதகுகள் முழுமையாக சேதமடைந்ததைக் கூட கண்டு கொள்ளாமலும், நீர் மறுகால் செல்லும் தடுப்பணைகள் முழுமையாக சேதமடைந்த பகுதி பக்கம் கூட செல்லாமலும் கண்மாய் தூர்வாரப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்பழகன் கூறியதாவது,”இந்த கண்மாயினை தூர்வாருவதற்கான எந்த ஒரு வேலைகளும் நடக்கவில்லை. தண்ணீர் வருவதற்கான நீர் வழிப்பாதைகள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனால் நீர் வருவதற்கு வழியே இல்லை. இந்தப் பணிகளுக்கு ரூ.4.50 லட்சம் திட்ட மதிப்பீடு செய்து திட்டப்பலகை வைத்திருந்தனர். தற்போது அந்தப் பலகையும் காணவில்லை. கல்வெட்டில் திட்ட மதிப்பீடுக்கான செலவுகளும் சுரண்டி அழிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற மோசடிகளால் மக்களின் வரிப்பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரை பெருக்குவதற்கான எந்த ஒரு செயலும் செய்யவில்லை. இந்த கண்மாயை தூர்வாரியதில் மோசடிகள் நடைபெற்றிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த கண்மாயில் பெயரளவிற்குத் தூர்வாரப்பட்டுள்ளது குறித்து தேனி ஊராட்சி ஒன்றிய பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த கண்மாயினை 4.50 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரவில்லை என்றும், 2 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரியுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் தவறுதலாக ரூ.4.50 லட்சம் எனப்பெயர் பலகையில் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும் வரத்து வாய்காலை தூர்வார நிதி ஒதுக்கப்படவில்லை என்றும்; இரண்டு லட்சம் ரூபாய் செலவில் முழுமையாகப் பணிகள் நடைபெற்று உள்ளதாகவும், இதற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதனையடுத்து இந்த கண்மாயில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டதாக கூறப்பட்ட பெயர்ப்பலகை தற்போது காணாமல் போயுள்ளது. மேலும் கல்வெட்டில் ரூ.4.50 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இடம்பெற்று இருந்த தகவலும் தற்போது அழிக்கபட்டுள்ளன.

நீரே வராத கண்மாயைத் தூர்வாரியதாக ரூ.4.50 லட்சம் கணக்கு... மாயமான திட்டப்பலகை

நீரே வராத கண்மாயினை அடிக்கடி தூர்வார நிதி ஒதுக்கீடு செய்வதன் மர்மம் தான் என்ன? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிங்க:சாப்பிடும் போது தொண்டையில் பரோட்டா சிக்கி வாலிபர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details