தேனி மாவட்டம் சின்னமனூர் கே.கே.குளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரது மகன் கோபிநாதன் (30). டிப்ளமோ கேட்டரிங் படித்து சவுதியில் வேலை செய்துவந்த இவருக்கு, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் மகள் ஜெயப்பிரியாவுடன் (23) திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மீண்டும் கோபிநாதன் சவுதி அரேபியா சென்றதால், ஜெயப்பிரியா அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய கோபிநாதன், தனது மனைவியை வீட்டிற்கு வரும்படி நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு ஜெயப்பிரியா வரமறுத்தாகவும், மாமனார், மாமியார், மைத்துனர் மற்றும் உறவினர்கள் அவரைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து வீடு திரும்பிய கோபிநாதன் நேற்று முன்தினம் (அக். 14) இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக கோபிநாதனின் தந்தை பாலசுப்ரமணி அளித்த புகாரின் பேரில், சின்னமனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட கோபிநாதன் கடைசியாக எழுதியக் கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில், “நான் கோபி எழுதிக்கொள்கிறேன். எனக்கு வாழ விருப்பம் இல்லாததால் நான் உயிரை மாய்த்துகொள்கிறேன். என் சாவுக்கு ஏழுபேர் காரணம். உண்மையான நீதி கிடைத்தப் பிறகே என் உடலை எரிக்க வேண்டும். என் சாவுக்கு காரணமான ஜெயப்பிரியா (மனைவி), பிரேம்குமார் (மாமனார்), கமலா (மாமியார்), நிஜந்தன் (மைத்துனர்), விமலா, வாசியம்மாள், நர்மதா (ஜெயப்பிரியாவின் உறவினர்கள்) ஆகியோருக்கு உண்மையான தண்டனை கிடைக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதல்கட்டமாக ஜெயப்பிரியா, விமலா (45), நிஜந்தன் (25), கமலா (43) ஆகிய நால்வரை கைதுசெய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.