தேனி: பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை, லட்சுமிபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு அல்போன்சா, பங்கனம்பள்ளி, காலைபாடி, இமாமஸ், செந்தூரா, கல்லாமை, காசா உள்ளிட்டப் பல்வேறு மா ரகங்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் 30 முதல் 40 சதவீத அளவில் மட்டுமே மாம்பூக்கள் பூத்தது. மேலும் கடந்த ஆண்டு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே மாம் பூக்கள் பூத்திருந்ததால் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, மா விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழையும் உரிய நேரத்தில் பெய்ததோடு தற்போழுது இரவில் முழுமையான பனிப்பொழிவும் பகல்பொழுதில் வெயிலும் அடித்து வருவதால் பெரியகுளம் பகுதியில் மா மரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு மாம் பூக்கள் 70 முதல் 80 சதவீத மாம் பூக்கள் பூத்து குலுங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.