நீலகிரி:தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் உறி அடித்து, பழங்குடியினர்களின் பாரம்பரிய இசை நடனத்துடன் நேற்று (ஜன. 17) பொங்கல் பண்டிகை களைகட்டியது. இதில் வளர்ப்பு யானைகளுக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கப்பட்டன.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகத்தில் உள்ள தமிழர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் மக்களால் பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இதில் கலந்து கொண்டனர். பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசையுடன் பொங்கல் விழா தொடங்கியது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் உறியடித்தல் போட்டியில் பங்கேற்ற வெற்றி பெற்றனர்.