- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி அழியும் பட்டியலில் உள்ள விலங்காக யானையை இந்திய அரசு முன்னதாக அறிவித்தது.
- இதனையடுத்து 2010ஆம் ஆண்டு யானைகளை பாரம்பரிய விலங்காக ஒன்றிய அரசு அறிவித்தது. யானைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- வன விலங்ககளில் மிகப் பெரிய உருவமாக உள்ள யானை அனைவரையும் ஈர்க்கும் விலங்காக உள்ளது. தற்போது உலகில் உள்ள யானைகளின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 64 ஆயிரம்.
- யானைகளில் ஆப்பிரிக்கா யானை, ஆசிய யானை என இரண்டு வகைகள் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள் உருவத்தில் பெரியவை. ஐந்து டன் முதல் ஆறு டன் எடை கொண்டதாக இவை இருக்கும். ஆசிய யானைகள் 4.5 டன் முதல் 5.5 டன் எடையைக் கொண்டிருக்கும்.
- தற்போது நான்கு லட்சத்து 15 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகளும், 47 ஆயிரம் ஆசிய யானைகளும் உள்ளன. ஆசிய யானைகள் இந்தியா, நேபாளம், தாய்லாந்து, இலங்கை, சுமத்திரா, மலேசியா, பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா, சீனா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
- ஆசிய யானைகளில் 50 விழுக்காடு யானைகள் இந்திய வனப்பகுதிகளில் உள்ளன. இந்தியாவில் 29 ஆயிரம் யானைகள் உள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா வனப்பகுதிகளில் மட்டும் 14 ஆயிரம் யானைகள் உள்ளன.
- உலகில் மிக அதிகமாக நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் 12 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ வரையிலான பசுந்தழைகளை உண்ணக்கூடியவை.
- நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும் இந்த யானைகள், 40 கிலோ மீட்டம் வரை நாள்தோறும் பயணித்து உணவை உட்கொள்ளும் தன்மை கொண்டவை. இந்த யானைகள் 60 வயது முதல் 65 வயது வரை உயிர் வாழகூடியவை.
- வளர்ப்பு யானைகளின் ஆயுள்காலம் பொதுவாக 70 முதல் 75 வரை இருக்கும். இந்தியாவில் 1990ஆம் ஆண்டு ஒரு ஆண் யானைக்கு 27 பெண் யானைகள் என்ற விகித்தில் இருந்தது. தற்போது ஆண் யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவது தடுக்கபட்ட நிலையில் ஒரு ஆண் யானைக்கு எட்டு பெண் யானைகள் என்ற விகிதத்தில் உள்ளன.
- யானைகள் கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய வன விலங்குகளாகும். ஒன்றிய, மாநில அரசுகள் யானைகளை பாதுகாக்க ’எலிபேன்ட் பிராஜக்ட்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதன்கீழ் காடுகளில் யானைகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன.
- தமிழ்நாட்டில் யானைகளுக்காக வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் வெட்டப்பட்டு நீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு 2,800 யானைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3,500ஆக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- தமிழ்நாட்டிலுள்ள வனப்பகுதிகளில் 50 விழுக்காடு வனப்பகுதி லண்டானா, இப்படோரியம், பார்தீனியம் போன்ற களைச்செடிகள் ஆக்கிரமித்து யானை போன்ற வன விலங்குகளுக்கு உணவு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் விவசாயப் பகுதிகளுக்கு வருவதால் யானை - மனித மோதல்கள் அதிகரித்துள்ளன.
- யானைகள் வனப்பகுதியிலிருந்து வருவதைத் தடுக்க அவற்றுக்குத் தேவையான உணவுகளை வனப்பகுதிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யானை ஆராய்ச்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- யானைகளின் வழித்தடங்களை பாதுகாத்து, யானைகளின் வாழிடங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் யானைகளை பாதுகாப்போம். யானைகளின் வளம் வனத்தின் வளம், வனத்தின் வளம் நாட்டின் வளம் எனவே சர்வதேச யானைகள் தினத்தில் யானைகளை பாதகாப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்போம்.
- இதையும் படிங்க:யானைகள் ஆசீர்வாதத்தில் மருத்துவ குணங்கள்- கம்பீர தோற்றத்தில் இருக்கும் சிறப்புகள்
யானைகளையும், அவற்றின் வாழ்விடங்கள், வழித்தடங்களையும் பேணிப் பாதுகாப்போம்!
இன்று உலக யானைகள் தினம் ஒருபுறம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம், வனப்பாதுகாவலனான யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்றைய தினத்தில் யானைகளையும், அவற்றின் வாழ்விடங்கள் வழித்தடங்களையும் பாதுகாப்பது குறித்து காண்போம்.
நீலகிரியில் அதிகம் வாழும் களிறுகள்
Last Updated : Aug 12, 2021, 7:43 PM IST