நீலகிரி:குன்னூர் மலைப்பகுதி சுற்றுலாவுக்கு மட்டும் அல்ல சாக்லேட்டுகளும் பிரபலமானது. இங்குள்ள மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் அதிக அளவு கொக்கோ செடிகளைப் பயிரிட்டு அதன் மூலம் நல்ல லாபம் பெருக்கின்றனர். இந்த கொக்கோ செடிகள் குளிர்ச்சியான காலநிலையில் உள்ள நிலப்பகுதிகளில்தான் அதிகம் விளைச்சல் தரும் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த கொக்கோ செடிகளைப் பயிரிடமுடியும். அது மட்டுமின்றி இந்த கொக்கோ செடிகள் ஊடு பயிராகவும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
இப்படி அங்கு விளையும் கொக்கோ விதைகள் சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றது. அதேபோல் இந்த கொக்கோ விதைகளைக் கொண்டு அங்குள்ள பல விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சொந்தமாக ஹோம் மேட் ஜாக்லேட்டுகளை தயாரிக்கின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக சிம்ஸ் பார்க், லேம்ஸ்ராக், சால்பின் நோஸ் போன்ற பகுதிகளில் ஏராளமான ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் இந்த சாக்லேட்டுகளை வாங்கி செல்கின்றனர். அது மட்டுமின்றி சாக்லேட்டுகளுக்கு பெயர்போன நீலகிரி மாவட்டத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கென சிறப்பான முறையில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழுக்குப் பேட்டியளித்த நீலகிரி மாவட்ட சாக்லேட் உற்பத்தியாளர் புண்ணிய செல்வி, நீலகிரியில் தயாரிக்கப்படும் சாக்லேட்டில் 40 சதவீதம், 60 சதவீதம், 90 சதவீத என கொக்கோவின் அளவை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு -ஃபிளேவர்களில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் அந்த சாக்லேட்டுகளில் பாதாம் மற்றும் பாதாம் பால் உள்ளிட்ட பல்வேறு நட்ஸ் வகைகள் சுவைக்காகச் சேர்க்கப்படுவதாகவும் அவர் அப்போது கூறினார். அது மட்டுமின்றி கிவி, மாம்பழம், பைனாப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும் அதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் அவர் கூறினார்.