நீலகிரி:கோத்தகிரி கடைகம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் நிஷாந்த் மற்றும் ஹரிபிரியா (24). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இரண்டாவது பிரசவத்தை உறுதி படுத்துவதற்காக குன்னூர் ஐயப்பன் கோயில் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹரிபிரியா அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஹரிபிரியா 5 வாரங்கள் கர்பமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. முதற்கட்ட சிகிச்சை மேற்கொண்ட நிலையில் திடீரென நேற்று இரவு (ஜூன் 29) உயிரிழந்தார். காரணம் என்னவென்று தெரியாத உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பின்னர் இவரது உடல் உதகை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்செயல் மரணம் என்று வழக்கு பதியப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டிற்குள் மரணம் நேர்ந்ததால் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் குன்னூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவத்தை உறுதி செய்ய சென்றப் பெண் உயிரிழந்த சம்பவம் கடைகம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதே போல் சமீபத்தில் கடைகம்பட்டி கிராமத்தில் அஸ்வினி என்ற இளம்பெண்ணுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும், இவர் தனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முயற்சி செய்துவரும் நிலையில், பண நெருக்கடியால் அவரின் குடும்பம் தவித்து வந்திருக்கிறது. மேலும் இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையறிந்த கிராம மக்கள், பல்வேறு வழிகளில் சிகிச்சைக்கான நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.