நீலகிரி: மஞ்சூரில் பிரபல தனியார் நிதி நிறுவனமான முத்தூட் பைனாஸ் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த சாந்தி பிரியா இவருடன் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் ராஜு, கேசியர் நந்தினி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகியோர் கடந்த, 2021 மார்ச் 9ஆம் தேதி முதல் 2021 செப்.1ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் 81 வாடிக்கையாளர்களின் நகைக் கடன் கணக்குகளிலிருந்து ஒரிஜனல் தங்க நகைகளை எடுத்து விட்டு அந்த 81 பாக்கெட்டுகளில் போலி நகைகளை வைத்துள்ளனர்.
பின், 43 பாக்கெட் அசல் நகைகளை ஏற்கனவே உள்ள வேறு வாடிக்கையாளர்களின் பெயர்களில் போலியான ஆவணங்களைத் தயாரித்து, 98 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். தனியார் நிதி நிறுவனத்தின் ஆய்வின் போது போலியான ஆவணங்களை வைத்து நிதி நிறுவன ஊழியர்களே பண மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தனியார் நிதி நிறுவனம் சார்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், நகை மதிப்பீட்டாளர் ராஜு (32), கேஷியர் நந்தினி (30), கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் (30) ஆகியோர் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டனர்.