நீலகிரி :நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்த நிலையில், வனப்பகுதிகள் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 10 நாட்களாகக் குட்டியுடன் கூடிய 10 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடிச் சுற்றித் திரிந்து வருகிறது.
குறிப்பாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் புதுக்காடு, கோழிக்கரை, குரும்பாடி மரப்பாலாம், காட்டேரி பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைக்கூட்டங்கள், அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரத்தொடங்கி உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. அவ்வப்போது, காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும் அவைகள் வனப்பகுதிக்குச் செல்லாமல் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியிலேயே சுற்றித் திரிகின்றன. மேலும், தற்போது மேக மூட்டம் அதிகமாகக் காணப்படுவதாலும் யானையின் நடமாட்டங்களைக் கண்டறிய முடியாமல் விரட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.