நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதி முழுவதும் பசுமை இழந்து காணப்படுகிறது. குறிப்பாக 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலவும் வெப்பத்தின் காரணமாக கடும் வறட்சி தொடங்கியுள்ளது.
இதனால், வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு மரம், செடி, கொடிகள் பட்டுப்போய் காட்சி அளிக்கின்றன. வனப்பகுதி வறண்டதால் யானைகள், புலிகள், காட்டெருமைகள் உள்பட அனைத்து வனவிலங்குகளுக்கும் குடிநீர், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது.
இதையடுத்து, வன விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட தண்ணீர்த் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
லாரி மூலம் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டு தொட்டிகளில் ஊற்றப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அதிக யானைகள் இருக்கும் மசினகுடி வனச்சரகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் மட்டும் தினந்தோறும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அத்துடன் சோலார் தானியங்கி மின் மோட்டர்கள் மூலமும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
வனவிலங்குகளுக்குத் தண்ணீர் நிரப்பும் வனத் துறையினர் தொட்டிகளில் ஊற்றப்படும் தண்ணீரை வனவிலங்குகள் குடித்து தாகம் தீர்த்துவருகின்றன. இதனிடையே, தொட்டிகளில் தண்ணீர் குடிக்கும் வனவிலங்குகளைக் கண்காணிக்க நவீன தானியங்கி கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. மழைக்காலம் தொடங்கும் வரை இந்தப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பர்கூரில் ஒற்றை யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!