கடந்த சில தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. திங்கட்கிழமை 63 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 91 அடியாக அதாவது, ஒரே வாரத்தில் 28 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் கனஅடி நீரும் குறைந்தபட்சமாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீரும் வந்துகொண்டிருந்தது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழையளவு குறைந்ததால் பில்லூர் அணையிலிருந்து மேட்டுப்பாளையம் பவானிஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் விநாடிக்கு நான்காயிரம் கனஅடியாகவும் மாயாற்றிலிருந்து வரும் நீர்வரத்து ஆயிரம் கனஅடியாகவும் குறைந்து பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9,672 கனஅடியாக குறைந்தது.
இதனால் தற்போது, அணையின் நீர்மட்டம் 91 அடியாக ஒரே சீராக இருக்கிறது. நேற்று முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மேலும், 16ம் தேதி பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்புகளை (லிங்க்) சொடுக்கவும்...