தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2019, 10:38 AM IST

ETV Bharat / state

'சாலையில் வீணாகச் செல்லும் தண்ணீரை சேமிக்க வேண்டும்!'

நீலகிரி: குன்னூர் சாலையில் வீணாக செல்லும் தண்ணீரை சேமித்துவைத்து கோடைகாலங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வறண்டு காணப்பட்டது. ஆனால், தற்போது பெய்து வந்த தொடர் கனமழையால்அணை முழுக் கொள்ளளவான 34 அடியை எட்டியுள்ளது.

இதனால், அணையிலிருந்து உபரிநீர் கடந்த 15 நாள்களாக வெளியேறி சாலையில் வீணாக வழிந்தோடுகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி செல்வதால் அதனை சேமித்து மக்களுக்கு வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் நகராட்சி அலுவலர்கள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அருகிலுள்ள தடுப்பணையை தூர்வாரி தண்ணீரை சேமிப்பதுடன், கூடுதல் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மேலும், அணையிலிருந்து குன்னூர் நகரத்திற்கு வரும் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வழிந்தோடுகிறது. இது குறித்து, குடிநீர் வாரியமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

கடந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறையால் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கும் ஆயிரம் லிட்டர் கொண்ட சின்டெக்ஸ் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகும் அவலம் ஏற்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் வீணாகும் தண்ணீரை தடுப்பணைகளைக் கொண்டு சேமிக்க வேண்டும்.

சாலையில் வீணாகச் செல்லும் குடிநீர்

சேமித்த தண்ணீரை குன்னூர் நகர பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் குடிநீரை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி அலுவலர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : தண்ணீரில் தத்தளித்து பள்ளிக்குச் செல்லும் அபாயம்: சரி செய்யுமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details