நீலகிரி: பழங்குடியின மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை விரைந்து தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மக்கள் நல்வாழ்வுத் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுத் துறை அலுவலர்கள், தனித்தனி குழுக்களாகப் பிரிந்து, தடுப்பூசி போடும் பணியில் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக குன்னூர் வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையிலான மக்கள் நல்வாழ்வுத் துறையினர், உலிக்கல் பேரூராட்சிக்குள்பட்ட ஆணைப்பள்ளம் பழங்குடியின கிராமத்தில், 18 வயதிற்கும் மேற்பட்ட 120 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர்.
மேலும் குன்னூரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
அதில் சிலர் தானாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திகொண்டாலும், கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட பயந்துகொண்டு போடாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று கட்டாயம் தடுப்பூசி போடுமாறு அலுவலர்கள் வலியுறுத்தி, தடுப்பூசி போட்டுள்ளனர்.
குன்னூரில் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய பழங்குடியின மக்கள், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 பேர் உள்ளனர். அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:யூடியூபர் மதனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!