நீலகிரி: இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைகளின் இடையே நூற்றாண்டு காலமாக இயங்கும் ரயிலில் தங்களின் வாழ்நாளில் ஒரு நாளாவது பயணிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் இதில் செல்ல ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆசியாவில் தற்போதும் பல்சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரயிலான இந்த மலை ரயில் 208 வளைவுகளின் வழியாக வளைந்து, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி, 250 பாலங்களைக் கடந்து ஐந்து மணி நேரம் பயணம்செய்வது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சிறப்புப் பெற்ற மலை ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை 1899ஆம் ஆண்டு சேவைக்காகத் தொடங்கப்பட்டது. 1908ஆம் ஆண்டுமுதல் குன்னூரிலிருந்து ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46. 61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கு இடையே அமைத்த பிடிப்பான்களில் ரயிலின் பல் சக்கரங்களால் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில், சிவாஜி, கமல், ரஜினி, விக்ரம் என பல நடிகர்களின் சாதனை படைத்த படங்களும், இந்தியில் சாருக்கான் உள்பட பலரின் படங்களும் இந்த ரயிலில்தான் எடுக்கப்பட்டுள்ளது.