தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊட்டியில் உள்ள உல்லாடா சிறந்த சுற்றுலா கிராமம்.. விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு! - today latest news

Best tourist village in Ooty: நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உல்லாடா கிராமம் சிறந்த சுற்றுலா கிராமமாக மத்திய சுற்றுலாத் துறையால் அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

best tourist village in ooty
ஊட்டியில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமம்.. விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 4:31 PM IST

ஊட்டி உல்லாடா கிராமத்திற்கு மத்திய அரசு விருது

நீலகிரி:ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் கிராமங்களில் சுற்றுலா என்ற கருப்பொருள் முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல மத்திய அரசு இந்தியாவில் சுற்றுலா கிராமங்களைக் கண்டறியும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கான போட்டி கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. உள்ளூர் கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களைக் கௌரவிப்பதே இதன் நோக்கமாகும்.

28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலிருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில் சிறந்த மலைக் கிராமம், கடற்கரையோர கிராமம் உள்பட பல்வேறு வகைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2023ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான பிரிவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கேத்தி ரயில் நிலையம் அமைந்துள்ள விவசாயம், பாரம்பரியம், கலாச்சாரம் கடைப்பிடிக்கும் கிராமம் எனக் கண்டறியப்பட்ட உல்லாடா கிராமத்தைத் தேர்வு செய்து விருதுக்காக அனுப்பியது.

இதனைப் பரிசீலித்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் ஊட்டி அடுத்த கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உல்லாடா கிராமத்தைச் சிறந்த சுற்றுலா கிராமமாகத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. இந்த விருது உலக சுற்றுலா தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையில் குழுவினர் டெல்லிக்குச் சென்று வந்தனர் இவர்களுக்கான பயண செலவு, உணவு செலவு, தங்குமிடம் ஆகியவற்றை மாநில சுற்றுலாத் துறை ஏற்றுக்கொண்டது.

இது குறித்து உல்லாடா கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார் கூறுகையில், "உல்லாடா கிராமத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம், உபசரிப்பு, பாரம்பரிய நடனம், சுகாதாரம், கோவில் திருவிழா, மலை காய்கறி விவசாயம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த விருதுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆய்விற்குப் பின் நம் மாநிலத்தில் சிறந்த சுற்றுலா கிராமமாக உல்லாடா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருது எங்கள் கிராமத்திற்குக் கிடைத்தது பெருமையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதை அடுத்து உல்லாடா கிராமவாசி ராஜேஷ் கூறுகையில், "உல்லாடா கிராமத்தைச் சிறந்த சுற்றுலா கிராமமாகத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளதால் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் கவனம் இங்குத் திரும்பும், இதனால் சுற்றுலா தொழில்கள் மேம்பட்டும் மற்றும் பொருளாதாரம் உயரும்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆசிய விளையாட்டில் ஜொலித்த தமிழக வீராங்கனை..! பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்தது எப்படி?.. கூறுகிறார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

ABOUT THE AUTHOR

...view details