தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிர்ச்சியும் ஏமாற்றமும் தருகிறது எனது சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு' - கௌசல்யா - Shankar murder case

நீலகிரி: எனது சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது எனக் கௌசல்யா தெரிவித்துள்ளார்.

udumalai-murder-case-kousalya
udumalai-murder-case-kousalya

By

Published : Jun 22, 2020, 1:52 PM IST

இது குறித்து குன்னூரில் அவர் அளித்த பேட்டியில், "எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது. முதலில் அன்னலட்சுமி விடுதலைசெய்யப்பட்டார். இப்போது சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

மற்றவர்களுக்குத் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கிறது. அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து அவர், "முதலில் இந்த அவசரமான கரோனா காலத்தில் இப்படிப்பட்ட வழக்கின் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமா? சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள சூழலில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதேபோல தமிழ்நாடு அரசு இந்த வழக்கைப் போதிய முனைப்போடும் அக்கறையோடும் நடத்தியிருக்கலாம்.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றதற்கும் என்னோடு அரசுத் தரப்பு கொண்டிருந்த தொடர்பு பெருத்த வேறுபாடு அடைந்திருப்பதை உணர்கிறேன். ஆனால் இன்னும் நீதிமன்றத்தின் மீதான எனது நம்பிக்கை இழந்துவிடவில்லை. எனது சட்டப் போராட்டத்தைத் தொடருவேன்" என்றார்.

மேலும் பேசிய அவர், "உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு தமிழ்நாடு அரசால் எடுத்துச் செல்லப்படும் என நம்புகிறேன். அப்படி இந்த வழக்கு நடத்தப்படும்போது உரிய சட்டக் கலந்தாய்வு செய்து எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக் கொள்வேன். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டேன். இன்னும் வேகமெடுத்து எனது போராட்டத்தைத் தொடருவேன்.

குறிப்பாக சின்னச்சாமி, அன்னலட்சுமி இருவரும் தண்டனை பெற வேண்டும். அதுதான் சங்கருக்குரிய குற்றவியல் நீதியாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்பின் போது

இறுதியாக அவர், "சங்கர் கொலைக்கு நேரடிப் பொறுப்பானவர்கள் ஆயுள் தண்டனை பெற்றவர்களா, விடுதலை செய்யப்பட்டிருப்பவர்களா? என்கிற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பான். இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது" என வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க:சாதி மறுப்புத் திருமணம்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு கடந்துவந்த பாதை

ABOUT THE AUTHOR

...view details