தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மர்மமான முறையில் இறந்து கிடந்த இரு புலிகள்.. விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனத்துறை விசாரணை!

Two Tigers died in Nilgris: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இறந்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tiger
Tiger

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 10:57 AM IST

நீலகிரி:உதகை அருகே அவலாஞ்சி பகுதியில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவலாஞ்சி நீரோடையில் மர்மான முறையில் இறந்து கிடந்த புலிகள்

இரு வாரத்தில் 5 புலிகள் இறப்பு: நீலகிரி மாவட்டத்தில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும் தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 5 புலிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு கிராமம், நேரு நகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி அணை, தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் மர்மமான முறையில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது.

தகவலின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் கெளதம் உள்ளிட்ட வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது இரண்டு புலிகள் சண்டையிட்டு இறந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் வைத்து கொல்லப்பட்டதா?முதல் கட்ட விசாரணையில் இரு புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த வனத்துறையினர், இதன் உண்மைத்தன்மையை கண்டறிய மாவட்ட வன அலுவலர் தேவராஜ் IFS தலைமையில் 20 பேர் கொண்ட தனிப்படை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இறப்புக்கான காரணம் குறித்து அறிய உயிரிழந்த இரு புலிகளை, ஐந்து கால்நடை மருத்துவ குழுவினர் மூலம், உடற்கூராய்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாக முதன்மை மாவட்ட வன அலுவலர் கௌதம் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கடந்த 9.9.2023 அன்று மாலை 4.30 மணியளவில், அவலாஞ்சி அணை, உபரி நீர் வாய்க்கால் அருகே இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் பணியாளர்கள் தெரிவித்தனர். அதனை அடுத்து, நீலகிரி மாவட்ட வன அலுவலர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

தனிப்படை குழு ஆய்வு:இறந்த இரண்டு புலிகளும் பெண் புலிகள். ஒரு புலி, வாய்க்காலிலும், மற்றொன்று வாய்க்காலின் மேல் கரையிலும் இறந்து கிடந்தது. இரண்டு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. இந்த புலிகள் இரண்டு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என நீலகிரி மாவட்ட வன அலுவலர் தகவல் அளித்துள்ளார்.

தேவராஜ் IFS, தலைமையில் 20 பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.

புலிகளுக்கு உடற்கூறு ஆய்வு:இந்த இரண்டு புலிகளும் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிதலின் படி இன்று (10.9.2023) காலை இரண்டு புலிகளுக்கும் உடற்கூராய்வு நடத்தப்படும். கால்நடை பராமரிப்புத் துறையின் இரண்டு கால்நடை மருத்துவர்கள் மற்றும் மூன்று வன கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாதிரிகள் எடுக்கப்பட்டு, நச்சியியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். புலிகளின் உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே, இறப்பிற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வாரததில் அடுத்தடுதது 5 புலிகள் இறந்துள்ள சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:Nilgiris First woman pilot: விமானம் ஓட்டும் வனமகள்.. படுகர் இனத்தின் முதல் பெண் விமானியின் கதை..

ABOUT THE AUTHOR

...view details