ரேஷன் அட்டைகளுக்கு 2 கிலோ கேழ்வரகு திட்டம் நீலகிரி: தமிழ்நாட்டில் உள்ளா அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களையும் சேர்த்து வழங்க அரசு முடிவெடுத்து பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக இத்திட்டம் நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ ராகி (Ragi) வழங்கும் திட்ட தொடக்க விழா உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது.
இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி,"இனி வரும் காலங்களில் குடும்ப அட்டைகள் தொலைந்தாலோ, புதிய அட்டைகளை பெற விரும்பினாலோ ஆன்லைனில் 45 ரூபாய் கட்டி புதிய குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளளலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு கைவிரல் ரேகை பதிய முடியாத சூழ்நிலையில், கண் கருவிழி பதிவின் மூலம் நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெரும் திட்டத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அரிசி கடத்தலை தடுக்க காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் குழுக்கல் அமைக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கையும் நடந்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு விநியோகிக்கும் திட்டம் முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு, உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் மாநிலத்தில் முதல்முறையாக துவங்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Pollachi Murder: கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை.. கேரளாவில் இளைஞர் கைது.. திருமணம் தாண்டிய உறவு காரணமா?