நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் தனியார் பள்ளி வளாக வேலி அருகே, சிறுத்தை ஒன்று சுருக்குக் கம்பியில் மாட்டி கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பெயரில் உதவி வன பாதுகாவலர், வனச்சரகர் மற்றும் முதுமலை கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்பொழுது சிறுத்தை உயிருடன் இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தையை மீட்டுள்ளனர். இருப்பினும், மீட்கப்பட்ட சிறுத்தை சுருக்குக் கம்பியில் மாட்டி தப்பிக்க முயன்ற பொழுது ஏற்பட்ட காயங்களினாலும், உணவு இன்றி கிடந்ததினாலும் சோர்வாகக் காணப்பட்டு உயிரிழந்துள்ளது.